விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்க உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.
இதையும் படியுங்கள் ; நாளை உதவி மருத்துவ அலுவலர்களுக்கான கலந்தாய்வு – மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்!
டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2 ஆம் ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்க உள்ளனர். இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா என முக்கியமான வீரர்கள் இல்லாதது அணியை பாதித்துள்ளது. கடந்த 2021-இல் இதேபோல் 4 டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்ற இந்தியா, அடுத்த 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
ஆனால், அப்போது இருந்ததை விட இங்கிலாந்து அணி தற்போது பலமிக்கதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. முதல் டெஸ்ட்டில் 190 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இருந்து அந்த அணி மீண்டது குறிப்பிடத்தக்கது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆலி போப்பின் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பை கட்டுப்படுத்த இந்திய பந்து வீச்சாளர் தடுமாறினர். அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோர் தங்களது உத்திகளை தகுந்த வகையில் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட்டுகள் நடைபெற்றுள்ள நிலையில், ஆடுகளம் பொதுவாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்குமெனத் தெரிகிறது.