#INDvsENG 2வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த 6ம் தேதி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவில் உள்ள கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 303 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கட் 65 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினர்.
இதையடுத்து 304 ரன்ககளை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஓப்பனிங் வீரர்களான ரோகித் சர்மா – சுப்மன் கில் பார்ட்னர்ஷிப் 136 ரன்கள் எடுத்தனர். இதில் கில் 60 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு களத்திற்கு வந்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 பந்துகளில் சதம் அடித்தார். இவருடன் பார்ட்னர்ஷிபில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ரோகித், 90 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரியுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 44.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து எதிரான தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே 4-1 என்ற இங்கிலாந்து எதிரான டி20 போட்டியை இந்திய அணி வென்றிருந்து.