#INDvsBAN | இன்று கடைசி நாள் ஆட்டத்தில் வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி!
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று (அக். 1) 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முஸ்பிகுர் ரஹிம் 11, லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9, மெஹிதி ஹசன் 20, தைஜூல் இஸ்லாம் 5, ஹசன் மஹ்மூத் 1, காலித் அகமது ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தபோதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 13-வது சதத்தை விளாசிய மொமினுல் ஹக் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி விரைவாக ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் விளாசிய நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் போல்டானார். தனது 6-வது அரை சதத்தை கடந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்முத் பந்தில் போல்டானார். இவர்களைத் தொடர்ந்து ஷுப்மன் கில் (39), ரிஷப் பந்த் (9) ஆகியோர் ஷகிப் அல்ஹசன் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்று ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடியும் ஆக்ரோஷமாக விளையாடியது.
விராட் கோலி 134.28 ஸ்டிரைக் ரேட்டில் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் தாழ்வாக வந்த ஷகிப் அல்ஹசன் பந்தில் போல்டானார். தனது 15-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 8, அஸ்வின் 1, ஆகாஷ் தீப் 12 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. ஜாகிர் ஹசன்10 ரன்களில் எல்பிடபிள்யூ முறையிலும், ஹசன் மஹ்முத் 4 ரன்களில் போல்டாகியும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்களையும் அஸ்வின் கைப்பற்றினார். ஷத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று (அக். 1) கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது வங்கதேச அணி. இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து குறைந்த இலக்கை துரத்தி வெற்றி காண்பதில் இந்திய அணி முனைப்புடன் செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.