#INDvsBAN T20 - தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2 ஆவது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்கினர். சாம்சன் 10 ரன்களும், அபிஷேக் சர்மா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் அவுட்டானார். முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது இந்திய அணி.
இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வங்கதேச அணியில், மகமதுல்லா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் 20க்கும் குறைவான ரன்களே எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 135 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது.