#INDvsBAN | இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 128 ரன்கள்
இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது. மொத்தம் 3 டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.
2வது போட்டி டெல்லி (அக்.9), 3வது போட்டி ஹைதராபாத்தில் (அக்.12) நடக்க உள்ளன. ரோகித், கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் டி20ல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் ஹர்திக், சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.
ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியிலும் மஹமதுல்லா, மெஹிதி ஹசன், தன்ஸித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதய், பர்வேஸ் உசைன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 27 ரன்களும் மெஹதி ஹசன் 35 ரன்களும் அடித்தனர்.
இதையும் படியுங்கள் : AirShow2024 | கூட்ட நெரிசலில் சிக்கி திணறிய மக்கள் – உயிரிழப்பு 5 ஆக உயர்வு!
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டும் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்க்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை மயங்க் யாதவ் கைப்பற்றியுள்ளார். வங்கதேச வீரர் மஹ்மதுல்லா விக்கெட்டை அவர் வீழ்த்தினார். சர்வதேச போட்டியில் அறிமுகமான மயங்க் யாதவ் முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். இதையடுத்து, இந்திய அணிக்கு 128 ரன்களை இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்துள்ளது.