#INDvBAN டி20 | சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டம்…வங்கதேச அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசினார். இதனிடையே, 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். 10-வது ஓவரில் மட்டும் 5 சிக்சர்களை சஞ்சு சாம்சன் விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து, சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடித்தார்.
இதையும் படியுங்கள் : Tirupati -ல் 8 நாட்களில் 30 லட்சம் ‘லட்டுகள்’ விற்பனை! தேவஸ்தானம் தகவல்!
பின்னர், 14வது ஓவரில் 111 ரன்களுக்கு சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தனது 75 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் ப்ராக் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், 18 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 297 ரன்களை குவித்தது.வங்கதேச அணி தரப்பில் தன்ஜிப் ஹசன் சகீப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில், 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.