#IndusWatersTreaty | பாகிஸ்தானுக்கு இந்தியா திடீர் நோட்டீஸ்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டின் ஆணையங்களும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றன.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாயும் ஜீலம், செனாப் நதிகளின் கிளை நதிகளான கிஷன்கங்கா (330 மெகாவாட்) மற்றும் ராட்டில் (850 மெகாவாட்) ஆகியவற்றில் நீர் மின் உற்பத்தி நிலையங்களை கட்ட இந்தியா திட்டமிட்டிருந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.