நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா - மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!
நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் முன்வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், மத்திய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நீதிபதி உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி சில மசோதாக்களை முன்வைப்பது வழக்கம்.
இதன்படி நீதிபதி உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்வது, செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப் பேஃக்' தொழில்நுட்பத்துக்கு இந்தியாவில் தடை விதிப்பது, குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்வது என 23 தனிநபர் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் பானர்ஜி கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அடுத்த இரண்டே நாளில் பாஜகவில் இணைந்தார். அதேபோல மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆர்யா ஓய்வுபெற்ற மூன்று மாதங்களில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில்தான் நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்யக்கோரி தனிநபர் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தனி நபர் மசோதாக்களை இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர். தனிநபர் மசோதா என்பது ஒரு பிரச்னை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் ஆகும். தனிநபர் மசோதாக்களுக்கு பெரும்பாலும் ஆதரவு கிடைக்காது. எனவே இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாது. சுதந்திரம் அடைந்த பின்னர் 1952-ஆம் ஆண்டில் இருந்து 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.