ஒரே நாளில் #AirIndia விஸ்தாரா உள்ளிட்ட 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஏர் இந்தியா, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களில் உள்ள 85 விமானங்களுக்கு இன்று (24.10.2024) மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் தற்போது சமூக ஊடகம் மூலம் கடந்த 17ம் தேதி 70 -திற்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (24.10.2024) ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ விமான நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆகாசா விமான நிறுவனத்தின் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கபட்டது.
இது குறித்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில், "விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையினருடனும் பேசி வருகிறோம். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளன.
இதையும் படியுங்கள் : தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்… #Andhra அரசின் அசத்தல் அறிவிப்பு!
விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சில விமானங்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இது தொடர்பாக, டெல்லி காவல்துறை 8 தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுபோன்ற போலியான மிரட்டல்களை விடுவோரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த சம்பவங்களால், நாட்டின் விமானப் போக்குவரத்து, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.