நாடு முழுவதும் #IndiGo விமான சேவை பாதிப்பு!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சிறந்த எரிபொருள் செயல்திறன், குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் வருகை மற்றும் புறப்பாடு போன்றவற்றினால் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கும் நிறுவனமாக இண்டிகோ திகழ்கிறது. உலகளவில் 60 நகரங்களில் 126 அலுவலகங்களையும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இண்டிகோ கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் கூறியதாவது,
"விமான நிலையங்களில் செக்-இன் செய்வது தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக எங்கள் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்."
இவ்வாறு இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.