தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி - பிறந்தநாளன்று சதமடித்த ’கிங் கோலி’!
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. பிறந்தநாள் அன்று சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்காமல் நீடித்தார் கிங் விராட்கோலி.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அணை போட்டு புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க தென் ஆப்பிரிக்க அணி தீவிரமாக முயலும்.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது. ஆட்டத்தின் 3.4 ஓவரில் ரோஹித் ஷர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷம்சி தவறவிட்டார். தொடர்ந்து 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, ரபாடா பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அதிரடியாக ஆடி 61 ரன்களை சேர்த்தது.