Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்தியாவில் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது” - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

02:53 PM Nov 28, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ள இந்த பயிற்சி கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிலேயே முதன்மையான இந்த பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளை சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த கல்லூரியில் பயிற்சி பெற தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அந்த அதிகாரிகளின் அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. இனி வரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் இது போன்ற பாதுகாப்பு படை பயிற்சிகளில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். பெண்கள் நாட்டுக்காக சேவை புரிவது பாராட்டுக்குரியது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பாதுகாப்பு துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்துள்ளேன்.

முப்படைகளில் உள்ள முக்கிய பொறுப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி ஒருவர் காமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த கப்பலில் பணிபுரியும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளை சந்தித்தேன். பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு ஊக்கமாக உள்ளது.

மேலும் பல பெண்கள் முப்படைகளில் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி, சாதனை புரிந்து வருகின்றனர். வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இந்திய மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 70 ஆண்டுகளாக இந்த முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் மயத்துடன் சிறப்பாக உள் கட்டமைப்புடன் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சர்வதேச அளவில் இந்த பயிற்சி மையம் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. இந்த கல்லூரியில் பயிற்சி பெற்ற பல அதிகாரிகள், தங்கள் நாடுகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்திய பாதுகாப்புத்துறையினர் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு முன்னோடியாக உள்ளனர். இந்திய முப்படைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் குடும்பத்தாரின் பங்கு அலப்பரியது.

இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றனர். இந்தியா எதிர்கால சாவல்களை சமாளிக்கும் வகையில் தனித்துவத்துடன், சுய சார்புடன் முன்னேறி வருகிறது. நமது பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, தளவாடங்களை ஏற்றுமதி செய்ய நம்பகத் தன்மையுடன் செயலாற்றி வருகிறது. பாதுகாப்புத்துறையில் நமது பாதுகாப்பு நிறுவனங்களான ஹெச்ஏஎல், டிஆர்டிஓ தடம் பதித்து வருகின்றன. தற்போது ராணுவ தளவாடங்கள் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம். வேகமாக மாறி வரும் புவியமைப்பு மாற்றத்தால் நமது புதிய சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டி நிலையுள்ளது. அத்துடன் காலநிலை மாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். அதற்கான ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பகளை உருவாக்க வேண்டும். நமது முப்படைகள் எதிர்கால சவால்களை சமாளிக்கும் வல்லமை படைத்துள்ளனர் என நம்பிக்கையுள்ளது.

இந்த பயிற்சி, உங்களுக்கு அனைத்து சவால்களை சமாளிக்கும் திறனை வழங்கும். இந்தியா உலகமே ஒரு குடும்பமாக பாவித்து வருவதால், சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறது. பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Tags :
Army Military EquipmentDroupadi MurmuIndiaPresident
Advertisement
Next Article