இந்தியாவின் முதல் வெர்ட்டிகிள் வெப் தொடர்... புது முயற்சியை கையில் எடுத்த இயக்குநர் குழந்தை வேலப்பன்!
பொதுவாக, தியேட்டர், தொலைக்காட்சி, லேப் டாப்பில் நாம் ஹரிசாண்டல் பார்மெட்டில் படங்களை பார்ப்போம். ஆனால், செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களை வெர்ட்டிகிள் பார்மெட்டில் பார்த்து ரசிப்போம். அவ்வாறு வீடியோ பார்ப்பது அதிகரித்து வருகிறது. இந்த வகையான ரீல்ஸ்கள் பல மில்லியன் பார்வைகளை பெற்று வைரலாகிறது. வெளிநாடுகளில் தற்போது வெர்ட்டிகிள் பார்மெட்டில், அதாவது செங்குத்து கோணத்தில் படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தொலைக்காட்சிகளும் மார்க்கெட்டில் வந்துவிட்டதாம். வெர்டிகிள் பார்மெட்டில் படம் எடுக்கும் நடைமுறையும் சமீபத்தில் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வெர்ட்டிகிள் பார்மெட்டில் முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது. இந்த சீரிஸை குழந்தை வேலப்பன் இயக்கி, கதைநாயகனாக நடித்துள்ளார். இவர் ஆண்மை தவறேல், யாக்கை படங்களை இயக்கியுள்ளார். மேலும், நர்மதாபாலு இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் வேறுயாருமல்ல, இயக்குனரின் மனைவி. இந்த சீரிசுக்கு ‘யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைவேலப்பன் இவ்வாறு படம் எடுக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, இதை பற்றி அறிந்து அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த சீரிஸ் ஒரு இளம் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டைம் லுாப்பில் மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, அதிலிருந்து வெளியே வந்தாரா? அந்த டைம் லுாப்பில் நடக்கும் சுவாரஸ்யங்கள் குறித்து இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் குழந்தை வேலப்பன் கூறியதாவது,
‘‘உலகில் இப்படிப்பட்ட புது முயற்சிகள் தொடங்கிவிட்டன. வருங்காலத்தில் வெர்ட்டிகிள் பார்மெட்டில் படங்கள் அதிகம் வரும். அதற்கான தனி மார்கெட் உருவாகும். கேன்ஸ் திரைப்படவிழாவில் ஒரு கருத்தரங்கில் இது குறித்து அறிந்தேன். இந்த முயற்சியை நண்பர்கள் உதவியால் இந்தியாவில் முதன்முறையாக தைரியமாக எடுத்தேன்.
ஆனால், படமாக்குவது கஷ்டமானது, சவால் நிறைந்தது. இதற்காக கேமரா கோணத்தை மாற்றினோம். நடிக்க பயற்சி எடுத்தோம். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சில வாரங்கள் போஸ்ட் புரடொக்ஷன் நடந்தது. இந்தவகை தொடரை தியேட்டரில் திரையிட வசதி இல்லை. எனவே, யூ டியூப்பில் வெளியிடுகிறோம். இந்த தொடர், கனடாவில் உள்ள டோரண்டோ திரைப்பட விழா, இத்தாலி திரைப்பட விழாக்களில் திரையிட்டு விருதுகளை அள்ளியுள்ளது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட படங்களை தயாரிக்க உள்ளோம்.
இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவது கூட சோம்பேறித்தனமாக இருக்கும். அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெர்டிகிள் சினிமா ஐடியா. வருங்காலத்தில் செல்போல் அல்லது அதன் அடுத்த வடிவம்தான் உலகை ஆளப்போகிறது. மூளையை விட அந்த சாதனத்தைதான் அதிகம் பயன்படுத்தப்போகிறோம் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன’’
இவ்வாறு இயக்குநர் குழந்தை வேலப்பன் தெரிவித்தார்.