நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார்.
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹுக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ வழித்தடத்தை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சின்னம் இல்லாத ஓபிஎஸ் தரப்பு | தாமரையில் போட்டியிட வலியுறுத்தும் பாஜக?
நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதான் எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ. மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ. 4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.
இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியதும் அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சேவையில் தினமும் 7 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.