2024-ல் இந்தியாவின் சிறந்த வங்கி.. சர்வதேச விருது பெற்ற #SBI..
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான ‘குளோபல் ஃபைனான்ஸ்’ இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) தேர்வு செய்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், அவற்றின் சேவைத் தரம், நிர்வாகம், செயல்பாடுகள், நிதியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்து வருகிறது. இந்த விருது உலகில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான இந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) தேர்வு செய்துள்ளது.
அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி மாநாட்டில் இந்த விருதை எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.ரெட்டி பெற்றுக் கொண்டார். இது தொடா்பாக எஸ்பிஐ தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், “வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை எஸ்பிஐ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான வங்கி சேவையை அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மை, செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. வங்கி எவ்வளவு பெரியது என்பது இந்த விருதின்போது பரிசீலிக்கப்படவில்லை. இதனால் பெருநிறுவன நிதித் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுகிறது. எஸ்பிஐயின் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் இந்தியா முழுவதும் சிறந்த நிதியை உள்ளடக்கிய செயல்பாடுகள் இந்த விருது அளிக்கப்பட்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.