தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை..!
இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா வேண்டியதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும், இந்த சேவை அடுத்த நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. சீன சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தாய்லாந்து செல்கின்றனர். தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி முதல் அக்டோபர் 29 வரை மொத்தம் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு 25 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிக்கிறது.
தாய்லாந்தின் நான்காவது பெரிய மூலச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்தியாவிற்கு முன், தாய்லாந்தின் மூன்று பெரிய சுற்றுலா ஆதார நாடுகளாக மலேசியா, சீனா மற்றும் தென் கொரியா உள்ளது.
இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வலுவாக உள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களும் இந்த சந்தையை குறிவைக்கின்றன. இந்த ஆண்டு 2.8 கோடி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம், தொடர்ந்து பலவீனமான ஏற்றுமதியால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விசா தேவைகளை மேலும் தளர்த்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து விரும்புகிறது.
தாய்லாந்து இந்தியர்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக, இளைஞர்களின் விருப்பமான இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு செல்ல பல புகழ்பெற்ற நகரங்கள் உள்ளன. நீங்கள் பாங்காக், ஹுவா ஹின், ஃபூகெட், பட்டாயா நகரம், சியாங் மாய், ஃபை ஃபை தீவு, முயாங் சியாங் ராய், அயுத்தாயா போன்ற நகரங்களுக்குச் செல்லலாம். இது ஒரு தீவு நாடு, எனவே நீங்கள் கடல் மற்றும் கடற்கரைக் காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.