”டிரம்பிடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனை” - கார்கே விமர்சனம்
அமெரிக்க அதிபராக 2 அவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக தற்போது அவர் அமெரிக்கவில் குடியுரிமை பெறாமல் அங்குள்ள பெரும் நிறுவனங்களில் பணிப்புரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதன் படி, இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
இந்த எச்1பி விசாவின் மூலம் அமெரிக்காவில் அதிகப்படியான இந்தியர்கள் பணிப்புரிவதாக தெரிகிறது. ஆகவே கட்டண உயர்வால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தனது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ,
டிரம்ப் அரசாங்கத்திடமிருந்து பிரதமர் மோடி பெற்ற பிறந்தநாள் பரிசுகளால் இந்தியர்கள் வேதனையடைந்துள்ளனர். அவை, இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் வகையில் H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது . H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள். ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம். சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு. இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். டிரம்ப் சமீபத்தில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாகக் கூறுகிறார்.
இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல.
வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.