காமன்வெல்த் கூட்டத்தில் இந்திய இளைஞர் பிரதிநிதிக்கு அங்கீகாரம் - நமீபிய அமைச்சருடன் சந்திப்பு!
காமன்வெல்த் இளைஞர் பேரவையின் (Commonwealth Youth Council - CYC) ஆசியப் பிராந்திய இளைஞர் முன்னெடுப்புத் தலைவரான பாஸ்கல் சசில் ஆர்., நமீபியாவில் நடைபெற்ற காமன்வெல்த் ஆலோசனைக் கூட்டத்தின் இடையே, நமீபிய அரசின் கல்வி, இளைஞர், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சனெட் ஸ்டீன்காம்பை (Sanet Steenkamp) சந்தித்து பேசினார்.
காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உலகளாவிய இளைஞர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இச்சந்திப்பில் இருவரும் விரிவாகப் பேசினர்.
பாஸ்கல் சசில் ஆர்., காமன்வெல்த் இளைஞர் பேரவையின் சார்பாக, காமன்வெல்த் நாடுகளின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து எடுத்துரைத்தார்.
இளைஞர் முன்னெடுப்புகள் மற்றும் திட்டங்கள் மூலம் சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் அவர் விளக்கினார். அமைச்சர் சனெட் ஸ்டீன்காம்ப், நமீபியாவில் கல்வி, இளைஞர் வளர்ச்சி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார். குறிப்பாக, விளையாட்டுத் துறையில் நமீபிய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பு, காமன்வெல்த் நாடுகள் இடையே இளைஞர் மேம்பாடு மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் பாஸ்கல் சசில் ஆர். இந்த உயர்ந்த பொறுப்பில் இருப்பது, நாட்டின் இளைஞர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.