“சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியை நிரந்தர சுற்றுலா தலமாக்க வேண்டும்” - விக்கிரமராஜா கோரிக்கை!
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சி ஆண்டு முழுவதும் சுற்றுலாத்தலமாக, நிரந்தரமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் 250 அடி ஆழமுள்ள மரணக்கிணறு எனும் கார் பைக் சாகச
விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா கூறியதாவது:
“சென்னை தீவுத்திடலில் 48வது தொழில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக விமானம் தாங்கிய கப்பல், 250 அடி பள்ளத்தில் மரணக்கிணறு சாகசம் போன்ற விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கையால் தயாரித்த பொருள்களை விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி நிரந்தர பொருட்காட்சியாக அமைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை தவிர சுற்றுலாத்தலங்கள் அதிகம் இல்லை. இதனை நிரந்தர சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும். உலகம்
வியக்கும் வகையில் மாற்ற வேண்டும். தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க, உள்நாட்டு சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும். பல்வேறு சிறப்பு அம்சங்களை உயர்த்தினால் வெளிநாட்டுக்கு செல்ல கூடியவர்கள் குறைவார்கள். தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் மேம்படுத்தினால், அனைத்து
சுற்றுலாத்தலங்களுக்கும் உலக அளவில் இருந்து பொதுமக்கள் வர வாய்ப்புள்ளது.
இதனால் தொழில் வளம், பொருளாதாரம் அதிகரிக்கும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் சுற்றுலாத்தளத்தில் தழைத்து ஓங்கும். நம்ம ஊர் பொதுமக்கள் எளிமையாக வரக்கூடிய இடம் பொருட்காட்சி தான். ஆகையால், இங்கு நுழைவு கட்டணம் 40 ரூபாய் தான்.
விடுமுறை நாட்களில் தீவுத்திடலில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு காவல் துறையினர்
சிறப்பாக பாதுகாப்பு அளித்தனர். எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. கடந்தாண்டு ஏற்பட்ட சிறிய விபத்து கூட இந்தாண்டு ஏற்படக்கூடாது என்பதற்காக மிகுந்த
கவனத்துடன் பராமரித்து வருகிறோம். என்னுடன் அரசுத் துறை அதிகாரிகளும் உடன்
இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, 8 லட்சம் பேர் வரை இங்கு வந்துள்ளனர். கடந்தாண்டு 50 லட்சம் பேர் வரை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பொருட்காட்சியை காண
வந்துள்ளனர். இந்த ஆண்டு அதிகம் வர வாய்ப்பு உள்ளது எதிர்பார்க்கிறோம். முழுவதும் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டால் பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளோம்
அதனை நடைமுறைப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.