தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி, மார்கோ ஜேன்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் மற்றும் ஷம்சி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குயிண்டன் டி காக் 5 ரன்களிலும், கேப்டன் டெம்பா பவுமா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ராஸி வாண்டர் துசென் (13 ரன்கள்), மார்கரம் (9 ரன்கள்), க்ளாச்ன் (1 ரன்), டேவிட் மில்லர் (11 ரன்கள்) மற்றும் கேசவ் மகாராஜ் (7 ரன்கள்) இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் தென்னாப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலுமே வெற்றியைப் பதிவு செய்து நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அசைக்க முடியாத அணியாக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது அசைக்கமுடியாத நிலையை எட்டியுள்ளது.