"இந்திய அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது" - பந்துவீச்சு பயிற்சியாளர் #MorneMorkel பெருமிதம்!
இந்திய அணி நிறைய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்தார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த 11-ம் தேதி சென்னைக்கு வந்தனர். இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி நாளை சென்னைக்கு வர உள்ளது. சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23-ம் தேதி முடிவடைந்ததும், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணியில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லை என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
"இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியை அதேபோல தொடர்ச்சியாக செயல்பட வைப்பதே எங்களது இலக்காக உள்ளது. அணியில் தரமான மூத்த வீரர்கள் இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அணியில் உள்ள வீரர்களுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்குவதே எங்களது வேலையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : #Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!
இந்திய அணி வீரர்கள் சிலருடன் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. வீரர்களிடம் நன்றாக பழகி அவர்களிடம் நட்பாக இருப்பது மிகவும் முக்கியம்.வீரர்களின் பலம் என்னவென்று தெரிந்தால்தான், எதிர்வரும் தொடர்களுக்கு அவர்களுக்கான இலக்குகளை அமைக்க முடியும். இந்திய அணி நிறைய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.