இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு...!
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர் ஸ்மிருதி மந்தனா. மகாராஷ்டிரத்தை சேர்ந்த இவர் அணியின் துணை கேப்டனாகவும் செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஸ்மிருதி மந்தனா முக்கிய பங்கு வகித்தார்.
இதனிடையே பிரபல இந்தி இசையமைப்பாளரான பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்த ஸ்மிருந்தி மந்தனா, அண்மையில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டார். இருவருக்கும் திருமணம் இன்று (நவ. 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சாங்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவரது உடல்நிலை சீராகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ரா கூறியது; ”காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீனிவாஸ் மந்தனா தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். தந்தையின் மேல் மிகவும் அன்பு கொண்டுள்ள ஸ்மிருதி, தனது தந்தையின் உடல்நிலை சீராகும் வரை திருமணத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்” என்றார்.