புதிய சாதனை படைத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டு மொத்தமாக 597 ரன்களை குவித்தார் ரோகித். இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 574 ரன்கள் அடித்திருந்ததார். அதுவே உலகக் கோப்பை தொடரில் ஒரு கேப்டன் குவித்த அதிக ரன்களாக இருந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 597 ரன்கள் அடித்து அவரது சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா.
மேலும் நேற்றைய இறுதிப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக ரோஹித் சர்மா மாறியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 86 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.