U19 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி...!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அண்டர் 19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ராஜ் லிம்பானி மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில் 48.5 ஒவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.