கேரள ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!
கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளா அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தொடங்கிய சபை கூட்டுத்தொடரில் கேரளா ஆளுநர் 136 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையின் 135 பக்கங்களை ஆளுநர் புறக்கணித்து கடைசி பக்கத்தை மட்டும் வெறும் 1.17 நிமிடத்தில் படித்து தனது உரையை நிறைவு செய்தார். ஆளுநரின் இந்த செயலால் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக இந்திய மாணவர் அமைப்பினர் (எஸ்எப்ஐ) கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வாகனத்தை விட்டு இறங்கி சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்துகொண்டு போராட்டக்காரர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தார்.
மேலும் போராட்டக்காரர்களை போலீசார் பாதுகாத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தொலைபேசியில் டிஜிபியிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
“குண்டர்களின் தேசமாக கேரளா மாறியுள்ளது. நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். இதுபோன்ற போராட்டங்களை செய்ய அனுமதிப்பவர்கள் காவல்துறையினர் தான். முதலமைச்சர் இந்த வழியில் செல்லும் போது சுமார் 50 போராட்டக்காரர்களை இப்படி நிற்க அனுமதி அளிப்பீர்களா? இது தொடர்பாக நீங்கள் இனி பேச வேண்டாம். ” என காட்டமாக பேசினார்.
இதனைத்தொடர்ந்து, போராட்டக்கார்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மொத்தம் 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.