அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் வெங்கடரமண பித்தலா, ஜெட் ஸ்கை விபத்தில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புளோரிடாவில் இந்திய மாணவர் ஒருவர் ஜெட் ஸ்கை விபத்தில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கடரமண பித்தலா (27) இந்தியானா பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்துள்ளார்.
முதுகலைப் படிப்பை முடிக்க இரண்டு மாதங்களே இருந்த நிலையில், அவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் விஸ்டேரியா தீவுக்கு அருகில் உள்ள ஃபியூரி விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஜெட் ஸ்கை செய்தபோது மற்றொரு ஜெட் ஸ்கை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வெங்கடரமண பித்தலா (27) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து மார்ச் 9 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.