பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!
பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கு இந்தியா நேற்று(மே.07) ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஹ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதில் சில பொது மக்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
ஆபரேசன் சிந்தூருக்கு பதில் தரும் வகையில் பாகிஸ்தானும் எல்லையில் பீரங்கி மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 43 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார், எல்லை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
இது குறித்து அவரது தந்தை கூறியதாவது, “ 2014-ல் என் மகன் பணியமர்த்தப்பட்டார், சமீபத்தில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு அவர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். அவர் மரணச் செய்தி காலையில் தான் தகவல் கிடைத்தது. எல்லையில் பணியில் இருந்தபோது நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாக தகவல் கிடைத்தது. அவரின் தியாகம் நினைவுகூரப்படும், முழு நாடும் அவரை நினைத்து பெருமைப்படும். அவர் ஒரு துணிச்சலான வீரர்” என கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.