பிரேசில் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரியானது நியாயமற்றவை என்றும் தெரிவித்திருந்தது.
இந்தியா போலவே பிரேசில் நாட்டிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆகியோர் தொலைப்பேசியில் பேசியுள்ளனர். இந்த தொலைப்பேசி உரையாடலில் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”ஜனாதிபதி லூலாவுடன் நல்ல உரையாடல் நடந்தது. எனது பிரேசில் பயணத்தை மறக்கமுடியாததாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பலவற்றில் நமது கூட்டாண்மையை ஆழப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா 50 சதவீத வரி உயர்விற்கு பின், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.