டெஸ்லாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!
டெஸ்லா நிறுவனத்தின் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று டெஸ்லா. இந்நிறுவனம், உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. பணிநீக்கம், பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் சமீப காலமாக எடுத்து வருகிறார். அந்த வகையில் டெஸ்லாவில் மீண்டும் பணிநீக்கம் நடந்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் டெஸ்லாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பெண் தனது லிங்க்டுஇன் பதிவில், “நேற்று டெஸ்லா குடும்பத்தில் எனக்கு ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையால் என்னை உட்பட எங்கள் குழுவில் இருந்த 75% பேர் வெளியேற்றப்பட்டனர். இதை கனத்த இதயத்துடன் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியாக என்னை வளர்த்துக்கொள்ள உதவிய இந்த வாய்ப்பிற்கும், டெஸ்லாவிற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
விற்பனை வீழ்ச்சி மற்றும் போட்டி அதிகரிப்பு காரணமாக டெஸ்லா நிறுவனத்தில் மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10%க்கும் அதிகமான பணியாளர்களை குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டதாக எலான் மஸ்க் அறிவித்திருந்ததுடன், அதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், சமீபத்தில் கூகுள் நிறுவனமும் python குழுவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.