கனடா பிரதமர் பதவி - ரேஸில் இருந்து விலகிய இந்திய வம்சாவளி!
கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பலரும் அப்பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் நெருக்கடி காரணமாக அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தது உலகம் முழுவதும் பேசு பொருளானது.
2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வந்த நிலையில் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் லிபரல் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை ஆகிய இரண்டு பொறுப்புகளில் இருந்தும் ட்ரூடோ ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, இடைக்கால பிரதமராக நீடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கனடாவில் பொருளாதார வளர்ச்சி மந்தம், விலைவாசி உயர்வு, வெளிநாடுகளுடனான வர்த்தக கொள்கைகளில் குழப்பம் போன்ற பிரச்னை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது முக்கிய கூட்டணி கட்சி ட்ரூடோவை ஆதரிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து சிறு கட்சிகளின் ஆதரவை பெற்று, தன் பதவியை ட்ரூடோ தக்க வைத்தார். இந்த நிலையில் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் மக்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியும், கனடா போக்குவரத்து அமைச்சருமான அனிதா ஆனந்த், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. கனடா பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து வெளியுறவு அமைச்சர் மெலனீ ஜோலி, நிதியமைச்சர் டொமினிக் லீப்லாங்க் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளி எம்.பி.யான சந்திரா ஆர்யா, மற்றொரு எம்.பி. ஃபிராங்க் பெய்லிஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அனிதா ஆனந்தும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல அடுத்த தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதை தவிர்த்து முந்தைய பேராசிரியர் பணிக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு ஒன்டாரியோ மாகாணத்தின் ஓக்வில்லே எம்.பி.யாக அனிதா ஆனந்த் தேர்வானதற்கு முன்பு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞராகவும் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.