இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை!
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரியேரா (47) கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு கேட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் குவைத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், கடைசியாக பிப்ரவரி 9ஆம் தேதி வீட்டிற்கு பேசியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரான பெரேரா ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ளார். பின்னர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போதுதான், ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெரேராவின் உறவினர் எடிசனும் அவருடன் சேர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்று இருக்கிறார். எனினும், இவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். சிகிச்சைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.