ஓய்வை அறிவித்தார் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை #DeepaKarmakar
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மாகர் தடகள விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவை சேர்ந்த தீபா கர்மகார் (31) சர்வதேச அளவில் முதலில், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், அந்தப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதையடுத்து, 2015ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற தீபா, உலக சாம்பியன்ஷிப்பில் 5ம் இடம் பிடித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார். 2018 ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். அதே போட்டியில் அடுத்த ஆண்டு வெண்கலம் வென்றார்.
இதையும் படியுங்கள் : AssemblyElections | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
தொடா்ந்து 2021ம் ஆண்டு ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 2021 அக்டோபரில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதற்கிடையே, இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தார்.தற்போது,தீபா கர்மாகர் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
"நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது எளிதான முடிவு இல்லை. ஆனால் இந்த முடிவை மேற்கொள்ள இது தான் சரியான தருணம் என உணர்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.