பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை... கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு!
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு இருக்குமோ என இந்தியா சந்தேகிக்கிறது.
இதனால் பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள், வட மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் பயண நேரம் இரண்டு முதல் மூன்றரை மணி நேரங்கள் அதிகரித்துள்ளது.
பல நூறு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக், டெல்டா, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஸ்விஸ், ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமானங்களில் விமான கட்டணங்கள் 12 முதல் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயண தூரம் அதிகரிக்கும் சூழலில் விமானத்தின் எரிபொருள் அதிகளவில் நிரப்ப வேண்டியது அவசியமாகிறது. இதன்காரணமாக பயணிகள் எண்ணிக்கை, பயணிகளின் சுமை போன்றவற்றை குறைக்க வேண்டிய சூழல் நிலவும்.
இதனால், ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் விமானத்தின் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.