“இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது” - பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேட்டி!
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகவும், அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை இன்று (ஜூலை 22) தாக்கல் செய்தார். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்" இவ்வாறு ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.