பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே இந்திய தூதரக அதிகாரி சத்யேந்திர சிவல், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை சார்ந்த நாட்டின் முக்கிய தகவல்களை சத்யேந்திர சிவல் பகிர்ந்ததாகவும், இந்திய ராணுவ தளவாடங்கள் குறித்த தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்புக்கு தெரிவித்ததாகவும், உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்கள் : மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும்போது, அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நிலைகள், பாதுகாப்புத்துறையின் நடவடிக்கைகள், வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை சத்யேந்திர சிவல் கேட்டறிந்ததும், அவற்றை இடைத்தரகர்களின் உதவியுடன் ஐஎஸ்ஐ அமைப்புக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.