இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் செயிண்ட் லூயில் நகரில் இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான அமர்நாத் கோஷ் (34) என்பவர் செயிண்ட் லூயிஸ் நகரின் எல்லைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் சம்பவ இடத்திலேயே அமர்நாத் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு பிப். 27 ஆம் தேதிஇரவு 7.15 மணியளவில் நடத்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : பட்டினியால் இறக்கும் காசா மக்கள் - இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்
இவர் நடனத்தில் PhD பட்டம் பெற வேண்டும் என்ற இலக்குடன் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் முதுநிலை படிப்பில் சேர்ந்து பயின்று வந்தார். 5 முதல் 18 வயதுடையோருக்கு நடன வகுப்புகளையும் நடத்தி வந்தார். இவர் சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
அமர்நாத் கோஷ் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் 'X' தளத்தில் வெளியிட்ட பதிவில் :
"இந்த துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள செயின்ட் லூயிஸ் நகர போலீசாருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இறந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தடயவியல் அறிக்கை மற்றும் போலீசார் விசாரணையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.