DSP ஆக பொறுப்பேற்றுக்கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் #MohammedSiraj!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், சிறப்பாக ஆடி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இதற்காக அவரை கௌரவிக்கும் விதமாக அவருக்கு குரூப் 1 பணியிடம் வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பை தொடர்ந்து அரசு வேலை தொடர்பான நியமனங்களில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தெலங்கானா அரசின் அறிவிப்பின்படி இன்று (அக்.11) தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர் முஹம்மது சிராஜ் டிஎஸ்பியாக (துணை காவல் கண்காணிப்பாளர்) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்ட அவருக்கு டிஎஸ்பி பணி வழங்கி கௌரவித்துள்ளது தெலங்கானா அரசு. ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ். இந்திய அணியில் முகமது சிராஜ் மூன்று வடிவ போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.