ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி | 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பு...!
5 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜிம்பாப்வே மற்றும் இந்தியா விளையாடும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 6 முதல் நடைபெற உள்ளது.
முன்னதாக, இந்திய அணி கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியது. பின்னர் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு மூன்று டி20 போட்டிகளை நடத்தியது.
ஆனால், அடுத்து டி20 உலகக்கோப்பை வரை எந்தவிதமான இருதரப்பு போட்டிகளிலும் இந்திய அணி விளையாட திட்டமிடப்படவில்லை. எனினும், இந்திய வீரர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் நடக்கும் ஐபிஎல் 2024 தொடரில் விளையாட உள்ளனர்.
இதற்கிடையே, ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பிசிசிஐ தனது ஆதரவை வழங்க உறுதியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே இந்திய அணியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் 2024 போட்டி அட்டவணை:
- 1வது T20I – சனிக்கிழமை, 6 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 2வது T20I – ஞாயிறு, 7 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 3வது T20I – புதன், 10 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 4வது T20I – சனிக்கிழமை, 13 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 5வது T20I – ஞாயிறு, 14 ஜூலை, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
இதில் மூன்றாவது போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளும் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. மூன்றாவது போட்டி மட்டும் மாலை 6 மணிக்கு தொடங்கும்.
இரு அணிகளும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது கடைசியாக மோதிய டி20 போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இருதரப்பு தொடர்களை பொறுத்தவரை ஜூன் 2016 இல் நடைபெற்ற கடைசி இருதரப்பு சந்திப்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 2-1 என வெற்றியைப் பதிவுசெய்தது மற்றும் இரு அணிகளும் எட்டு டி20 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இந்தியா 6-2 என முன்னிலை வகிக்கிறது.