இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!
2024-ம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரையடுத்து, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30-ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் நேரடியாகவும், 2022-ம் டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இவற்றுடன் 2022-ம் ஆண்டு நவம்பர் 14 தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளும் என 12 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 இடங்களுக்கு கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
இந்நிலையில் 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்ல இருப்பதாக திட்டமிட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் மட்டும் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகள் என மொத்தம் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இலங்கை அணியின் போட்டிகள் குறித்த அட்டவணையில், இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது.