"பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டம்" - அட்டாவுல்லா தரார் குற்றச்சாட்டு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ராணுவ தளபதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவத் தாக்குதலைத் நடத்த திட்டமிடுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும் ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவே இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறிய போதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்துள்ளதாக" தெரிவித்துள்ளார்.