இந்தியன் 2 திரைப்படத்திற்கு தடையா? அதிர்ச்சியில் படக்குழு!
இந்தியன் 2 திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வர்மக் கலைஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இந்தத் திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இன்றைய அரசியல் கட்டமைப்பில் இந்தியன் தாத்தா திரும்ப வந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை அடிப்படையாக கொண்டு இந்தியன் 2 படம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை HMS காலனியை சேர்ந்த மஞ்சா வர்மக்கலை தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அனுவில், வர்மக்கலை முத்திரையை தன்னிடம் அனுமதி பெற்று இந்தியன் முதல் பாகத்தில் வெளியிட்டதாகவும், இந்தியன் இரண்டாம் பாகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் வர்மக்கலை முத்திரையை படக்குழு பயன்படுத்தி இருப்பதாகவும் ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் கமலஹாசன், இயக்குநர் ?ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.