“அமெரிக்காவில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்” - ஜெய்சங்கர்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவால் இணைந்து பணியாற்ற முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் யார் வெற்றிப் பெற்றாலும், இந்தியா இணைந்து பணியாற்றும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் குறித்து பேசிய ஜெய்சங்கர், “மற்ற நாட்டினர் நம்மைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்று நாம் நம்புவதால், மற்றவர்களின் தேர்தல் குறித்து நாமும் கருத்து தெரிவிப்பதில்லை. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதில் இந்தியாவுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், உக்ரைன், தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். கொரோனா தாக்கத்திலிருந்து வெளிவந்த நாடுகள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.