"இந்தியாவை வெல்ல பல மடங்கு நன்றாக விளையாட வேண்டும்" - நியூசி. முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்துக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில் பேசியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி நிறைவடைந்த பிறகு, நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக். 16-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் கப்டில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, “இந்தியாவுக்கு எதிராக போட்டிகளில், சில நேரம் ரன்கள் எடுக்கவே முடியாது என்பது போன்று உணர்வு தோன்றும். இந்தியாவில் விளையாடும்போது இருக்கும் மிகப்பெரிய சவால் அதுதான். சில பந்துகள் நன்றாக ஸ்பின் ஆகும். சில பந்துகள் நேராக செல்லும். பந்து எவ்வாறு திரும்பும் என்பது குறித்து எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடுவது மிகவும் கடினம். இந்தியாவை வெற்றி பெற அவர்களைக் காட்டிலும் பலமடங்கு நன்றாக விளையாட வேண்டியிருக்கும். இந்தியாவில் மிகவும் வெப்பம் அதிகமாக இருக்கும். எல்லாம் உங்களுக்கு எதிராக இருப்பது போலத் தோன்றும். இவையனைத்தையும் தாண்டி இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், அவர்களைக் காட்டிலும் சிறப்பாக விளையாடியாக வேண்டும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் தற்போது உள்ள ஃபார்மில் இருவரில் யார் நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார்கள் எனக் கூறுவது கடினம். இருவரும் அந்த அளவுக்கு சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜாவையும் விட்டுவிட முடியாது. அவரும் அற்புதமாக விளையாடுகிறார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் அக். 16 முதல் அக். 20 வரை, பெங்களூருவிலும், 2-வது டெஸ்ட் அக். 24 - அக். 28 வரை புணேவிலும், 3-வது டெஸ்ட் நவ. 1 முதல் நவ. 5 வரை மும்பையிலும் நடைபெறவுள்ளது.