ஒலிம்பிக்கில் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா: 42 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்குமா இந்திய ஹாக்கி அணி?
இன்று தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 69 போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டிகள் இன்று முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த ஆண்டும் பதக்கத்தை தக்க வைப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர் வீராங்கனைகள் தடகளத்தில் பங்கேற்கின்றனர். அதில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் சந்தோஷ் தமிழரசன் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பெண்கள் பிரிவு 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் சுபா வெங்கடேசன் மற்றும் வித்யா ராமராஜ் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.
இதையும் படியுங்கள் : வெளியானது தனுஷின் 50-வது படமான ராயன்! திரையரங்கில் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!
நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரினும், ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரன்வேல் சித்தரவேலும் களம் காண்கின்றனர். அடுத்ததாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இடம் பெறுகின்றனர். இதில் மொத்தம் 21 துப்பாக்கி சுடும் வீரர்கள் களம் காணும் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். பெண்கள் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவனும், ஆண்களுக்கான ட்ராப் போட்டியில் பிரித்வி தொண்டைமானும் விளையாடுகின்றனர்.
டேபிள் டென்னிஸ் போட்டியை பொறுத்தவரை இந்தியா சார்பில் 8 வீரர்கள் உள்ளனர். இதில் ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் பாரத கேல் ரத்னா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத்கமல் பங்கேற்க உள்ளார். மேலும் மற்றொரு டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனும் களம் காண்கிறார்.
பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க 7 வீரர்கள் பாரீஸ் சென்றுள்ளனர். குறிப்பாக வீரர்கள் அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர் இம்முறை தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குத்துச்சண்டை மல்யுத்தம் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டியில் தலா 6 பேர் விளையாடுகின்றனர். கோல்ஃப் போட்டியில் நான்கு வீரர்கள் பங்கேற்கும் நிலையில், டென்னிஸ் போட்டியில் இந்தியாவிலிருந்து மூன்று நபர்கள் பங்கேற்கின்றனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜியும் ஒருவர் ஆவார். இதனையடுத்து நீச்சல் மற்றும் பாய்மரக்கப்பல் போட்டியில் தலா இரண்டு வீரர்கள் பங்கேற்கும் நிலையில், பாய்மரக்கப்பல் போட்டியில் ஆண்கள் பிரிவில் விஷ்ணு சரவணனும் பெண்கள் பிரிவில் நேத்திரா குமரனும் பங்கேற்கின்றனர். பளு தூக்குதல், ஜூடோ மற்றும் படகு ஒட்டுதல் போட்டிகளில் தலா ஒரு வீரரும் இந்திய அணி சார்பில் களத்தில் உள்ளனர்.
8 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி அணியில் மொத்தம் 19 வீரர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து 6 முறை தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணி, தனது 42 ஆண்டு கால தங்கப் பதக்க ஏக்கத்தை தீர்க்கும் என்ற எதிர்பார்ப்போடு ஒட்டுமொத்த நாடும் காத்துக் கொண்டிருக்கிறது.