இந்தியாவில் நடக்கும் 2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை - FIDE அறிவிப்பு
ஜார்ஜியாவில் தற்போது மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில், இந்தியாவை சேர்ந்த வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்தத் தொடரானது, அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் எனவும் மொத்தம் 206 வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியா 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் செஸ் உலகக் கோப்பையை நடத்தியது, அதில் விஸ்வநாதன் ஆனந்த் உல செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
நடப்பு உலக சாம்பியனான குகேஷ், 2023 உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, தற்போது உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசி ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை நடத்தும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அரங்கில் இந்திய செஸ் வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வரும் நிலையில் செஸ் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பது செஸ் விளையாடுவோர் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.