டி20 போட்டி | இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இதையும் படியுங்கள் : JammuKashmir | தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு!
இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஜெரால்ட் கோட்ஸி (9 பந்துகளில் 19 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். இந்நிலையில், 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதன்படி, அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.