புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் - பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியாவின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், கடந்த 2023 ஆண்டு ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை அங்கீகரித்தது. தொடர்ந்து
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இந்த மாத தொடக்கத்தில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல் எம் போர் விமானங்கள் மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களுக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் கடற்படையின் திறன்களை அதிகரிக்கும் வகையில், பிரான்சு நாட்டுடன் ரூ.63,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப்.28) கையெழுத்திட்டுள்ளது. அதன்படி நாட்டின் முதல் விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திற்காக 26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் iந்த 26 விமானங்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.
பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த இந்த விமானங்கள் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 டன் ரக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து இயக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.