“பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” - சவுரவ் கங்குலி பேட்டி!
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதன் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடர்களில் இந்தியா இனி விளையாடாது என்று அறிவித்தார்.
இது குறித்து ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம், “நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம், அதை(தாக்குதலை) நாங்கள் கண்டிக்கிறோம். மத்திய அரசு என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடப்போவதில்லை. இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் போட்டிகளில் விளையாட மாட்டோம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் உடனான அனைத்து விதமான கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் இந்திய மண்ணில் ஏதேனும் ஒரு பயங்கரவாத சம்மபவம் நடந்து வருகிறது. அதை இனி பொறுத்துக்கொள்ளக்கூடாது. பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடப்பது நகைச்சுவையாக மாறிவிட்டது. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.