பாலஸ்தீனத்துக்கு 30 டன் மருந்துப் பொருட்களை அனுப்பிய #India!
இந்தியாவிலிருந்து 30 டன் அளவிலான மருத்துவ பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் 1200 இஸ்ரேலியர்களும், 43,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பலமுறை கண்டனம் தெரிவித்தும் காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தே வருகிறது. இதனால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து 30 டன் அளவிலான மருத்துவ பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மனிதாபிமான ரீதியிலான உதவியாக பாலஸ்தீன மக்களுக்காக 30 டன் அளவிலான அத்தியாவசிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் உள்ளடங்கிய மருத்துவப் பொருட்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் பாலஸ்தீனத்துக்கு இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.