வயநாட்டிற்கு சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? - #RahulGandhi பதில்!
வயநாடு தொகுதிக்கு உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா காந்தி இருப்பாரா என்ற கேள்விக்கு, "அது கொஞ்சம் கடினமான கேள்விதான்" என நகைச்சுவையாக பதில் அளித்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி நேற்று (அக்.23) பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தி வாகனத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், பேருந்தில் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் ஒன்றாக அமர்ந்து வருகின்றனர். அவர்களுடன் கேரள மாநில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். ராகுல்காந்தியுடன் சில கேள்விகள் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : Chennai | நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல்… அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!
ராகுல் காந்தியிடம், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? என்ற கேள்விக்கு, ராகுல் காந்தி, "அது கொஞ்சம் கடினமான கேள்வி தான்" என்றார். இந்த பதிலைக் கேட்ட பிரியங்கா உள்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். ஒரு சில நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவில், ராகுல்காந்தியும் பிரியங்காவும் பேசிக்கொள்வதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, பிரியங்கா காந்தி, வயநாடு மக்கள் மீது ராகுல்காந்திக்கு இருக்கும் அன்பை தான் இது காட்டுகிறது என்றும், இது அடுத்து வரும் காலங்களிலும் நீடிக்கும் என்றும் கூறினார்.